Main Menu

கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும்: உட்துறை அமைச்சர்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும் என அந்நாட்டு உட்துறை அமைச்சர் அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) சீன்-மரைடைமில் கடற்கரைகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைத்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘முடக்க நிலையிலிருந்து வெளியேற்றம் என்பது, முடக்க நிலையின் படிப்படியான மாற்றமே என்பதை உணர்ந்து, மிகவும் அவதானத்துடன், அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவேண்டும். கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் மீண்டும் முடக்கப்படும்.

முடக்கநிலையிலிருந்து வெளியேறிய முதலாவது வார இறுதியான இன்று கடந்த 11ஆம் திகதியிலிருந்து ஒரு கட்ட முடக்கநிலை வெளியேற்றத்தை நாம் பாதுகாப்பாகத் கடந்துள்ளோம். எங்களது அவதானங்களும், கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே, நாம் இந்த வைரசஸற்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற முடியும்.

எங்களது இலக்கு, உங்களிற்கான அபராதங்களை விதிப்பதல்ல, கட்டுப்பாடுகளைப் பேணவைப்பதும், நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காப்பதுமேயாகும். திறக்கப்படும் கடற்கரைகளும் கடலும், கட்டுப்பாடுகளை மதிக்காவிட்டால், மீண்டும் பாவனைக்குத் தடைசெய்யப்படும். கடற்கரைகள் திறக்கப்பட்டாலும், 100 கிலோமீற்றர் தூரத்தினைத் தாண்டுவதற்கான தடை தொடர்ந்தும் உள்ளது’ என கூறினார்.

பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 179,365பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,625பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...