Main Menu

ஓய்வூதியத்துக்கு பதிலாக சம்பளம் வழங்க அனுமதி!

யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனைவரும் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் பணியிலிருந்த போது இறுதியாக வழங்கப்பட்ட சம்பளக்கொடுப்பனவிற்கு சமளவான தொகையை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியக்கொடுப்பனவாக வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்திருக்கிறது.

அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரரொருவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்குப் பதிலாக, அவர் பணிஓய்வு பெறமுன்பு பெற்றுக்கொண்ட அடிப்படைச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை உள்ளடக்கியதாக மாதாந்தம் ஓய்வூதியம் செலுத்தப்படும். 

அங்கவீனமுற்ற இராணுவ வீரர் குழுவொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக மாத்தறையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து அவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தார்கள். 

அவர்கள் நாட்டுக்காக மேற்கொண்ட சேவைகளைக் கருத்திற்கொண்டு அவர்களது ஓய்வூதியத்தை மேற்கூறப்பட்ட அடிப்படையில் வழங்குவதற்கு நிதியமைச்சரால் திறைசேரி பொறுப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

மேலும் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர், இந்த ஓய்வூதியக்கொடுப்பனவை நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்க முடியுமாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.

பகிரவும்...