Main Menu

உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்து உள்ளது – காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம்

உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது கட்டாயமானது.

சட்டத்தின் சார்பில் ஏதும் நியாயம் கிடைக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக காணாமல் போனோர் விவகாரத்துக்கு நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வெற்றிக் கொள்ள வேண்டும் என காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரட்டோ பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘சர்வஜன நீதி’ அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு சகல பொறிமுறைகளும் காணப்படுகின்றன. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், சட்டம் மற்றும் அரசாங்கம் உள்ளது. இருப்பினும் காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சர்வதேச விசாரணை பொறிமுறையா அல்லது தேசிய மட்டத்திலான உள்ளக விசாரணை பொறிமுறையா என்ற பிரச்சினை காணப்படுகிறது. உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது.

உண்மையை கண்டறிவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. இருப்பினும் எந்த உண்மையும் இதுவரை வெளிக்கொண்டு வரப்படவில்லை.

காணாமல் போனார் அலுவலகம் பற்றி மக்கள் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் 15 ஆயிரம் பேர் மாத்திரமே அலுவலகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்கள்.

அவர்களில் 4 ஆயிரம் பேர் இராணுவத்தினர். காணாமல் போனார் எண்ணிக்கையும் முரண்பட்டதாக காணப்படுகிறது.

60 ஆயிரம் என்கிறார்கள், 1 இலட்சத்து 47 ஆயிரம் என்கிறார்கள், 27 ஆயிரம் என்கிறார்கள். ஆகவே உண்மையான தகவல்களும் பதியப்படவில்லை.

காணாமல்போனார் அலுவலகத்தில் பதிவு செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் கொடுப்பனவுகளை வழங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் விபரங்களை பதிவு செய்வார்கள்.

ஆகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது கட்டாயமானது. சட்டத்தின் சார்பில் ஏதும் நியாயம் கிடைக்கவில்லை.

கடந்த கால சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இந்த அரசாங்கத்திலும் உயர்பதவிகளில் உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான பின்னணியில்  பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு விசாரணை கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். சிறந்த மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

ஆகவே வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக காணாமல் போனோர் விவகாரத்துக்கு நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வெற்றிக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியாக செயற்பட்டவர்கள் தற்போது தாம் மக்கள் விடுதலை முன்னணி இல்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தமிழர்களின் நம்பிக்கையையும் வெற்றிக் கொள்ள அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பகிரவும்...
0Shares