Main Menu

உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரில் இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி மகுடம் சூடியது!

உலகக்கிண்ண கூடைப்பந்து தொடரில் ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 18ஆவது உலகக்கிண்ண கூடைப்பந்து தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த, இந்த உலகக்கிண்ண கூடைப்பந்து தொடரில், 32 அணிகள் பங்கேற்றன.

இதில் நேற்று நடைபெற்ற எதிர்பார்ப்பு மிக்க மகுடத்துக்கான இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியும், ஆர்ஜெண்டீனா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடிய போதும், ஸ்பெயின் அணியின் கைகளே அதிகம் ஓங்கியிருந்தன.

இதற்கமைய, ஆரம்பத்திலேயே 11-2 என்ற கணக்கில் புள்ளிகளை குவித்த ஸ்பெயின், தனது ஆதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டியது. முதல் பாதியில் 43-31 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற ஸ்பெயின் இறுதி வரை அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது.

முடிவில் ஸ்பெயின் அணி 95-75 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்ஜெண்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கு முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்பெயின் அணி, முதல் முறையாக சம்பியன் பட்டத்திற்கு முத்தம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் அணியில் அதிகபட்சமாக ரிக்கி ருபியோ 20 புள்ளிகள் சேர்த்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இந்த உலகக் கிண்ண தொடரில் முதல் இரு இடங்களை பிடித்த ஸ்பெயின், ஆர்ஜெண்டீனா உட்பட 8 அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.

இதற்கு முன்னதாக நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பிரான்ஸ் அணியும், அவுஸ்ரேலியா அணியும் மோதிக் கொண்டன.

இதில், பிரான்ஸ் அணி 67-59 என்ற புள்ளி கணக்கில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த தொடரில் 5 முறை சம்பியனான அமெரிக்கா, காலிறுதியுடன் வெளியேறியதுடன் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 69 ஆண்டுகால உலகக்கிண்ண கூடைப்பந்து வரலாற்றில் அமெரிக்காவின் மோசமான செயற்பாடாக இது பதிவு செய்யப்பட்டது.

அடுத்த உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரை, எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...