Main Menu

இல் து பிரான்சுக்குள் 300,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

இல் து பிரான்சுக்குள் (Île-de-France) 300,000 தொழிலாளர்கள் இவ்வருட இறுதிக்குள் வேலையிழப்பார்கள் என மாகாண முதல்வர் வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலைக் காரணமாக இந்த நிலை ஏற்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘300,000 தொழிலாளர்கள் வேலை இழப்பதால் இல் து பிரான்சுக்குள் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது ஒரு வரலாறு காணாத பதிவாக இருக்கும்.

இந்த வேலை இழப்பினால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும். குறிப்பாக இல் து பிரான்சுக்குள் இந்த நெருக்கடி பெரும் பாதிப்பாக இருக்கும். எங்களிடம் சுற்றுலாத்துறை உள்ளது.

தொழில்பேட்டைகள் உள்ளது. போக்குவரத்து, விமான சேவைகள், காலாச்சாரம் மற்றும் நிகழ்வுகள் என அனைத்து தரப்பும் பாதிப்புக்குள்ளாகும்’ என கூறினார்.

பிரான்ஸில் எதிர்வரும் மாதங்களில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

முதல் காலாண்டில் 500,000 இற்குக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டியுள்ளது.

ஐரோப்பா மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் 2020ஆம் ஆண்டில் 11 சதவீதம் சுருங்கிவிடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

பகிரவும்...