Main Menu

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்ட முடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம் – கஜேந்திரகுமார்

13ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏனைய அனைத்து தரப்புக்களும் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

சரித்திரத்தில் முதல் தடவையாக நான்காவது அரசியலமைப்பு இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அந்த நான்காவது அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சியாக இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அதனை ஆதரிக்கும் நிலைமை உருவாகப் போகிறது.

சர்வதேசம் இன்றைக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பொன்று உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால்தான் இந்தத் தீவில் இனப் பிரச்சினை இல்லை எனவும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைய முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றார்கள்.

ஆனால், அந்த இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்திலே, போருக்குப் பிற்பாடு இதுவரைக்கும் எமது தலைவர்களாக இருந்தவர்கள் 13ஆவது திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தபடியால்தான் இன்று அபத்து உருவாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...