Main Menu

இந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்

இந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி  யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையமும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இழுவைப்படகு தொழிலால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தின்போது தமக்கான வாழ்வாதாரத்தை எதிர்காலத்தில் சரியான முறையில் செயற்படுத்த இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

போராட்டத்தின் இறுதியில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இழுவைப்படகு தொழில் அத்து மீறல்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் உள்ள விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் எடுத்துரைத்து தமக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பகிரவும்...