Main Menu

இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்தின்போது, ஆசிரியர் இடமாற்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதேநேரம், வட.மாகாண ஆளுநர், வட.மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர் உட்பட மத்திய கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளதாவது, ‘ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூரியில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதன் ஊடாக ஏற்படக்கூடிய ஒரு தலைமை ஆசிரியர் தொழிலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதனால் பல்வேறுபட்ட பிரதேசங்கள், பல்வேறுபட்ட சமூக பொருளாதார மற்றும் கலாசார சூழல்களில் உள்ள கல்லூரிகளில் சேவைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு தமது திறனை விருத்தி செய்வதற்கும் சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கை சுற்றறிக்கையின் பிரகாரம் இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை. ஆசிரியருடைய இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றது என  மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இடமாற்றம் தொடர்பாக தமக்கு உரிய தீர்வினை வழங்காவிடின், தேசிய ரீதியில் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பகிரவும்...