Main Menu

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைபர்மிங்காம்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் நீயா-நானா? என்று இரு அணி வீரர்களும் எப்போதும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.

குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆஷஸ் தொடரை 33 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 5 தொடர் ‘டிரா’வில் முடிந்துள்ளது. கடைசியாக 2017-18-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றதில்லை.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக உலக சாம்பியன் மகுடத்தை சூடிய இங்கிலாந்து அணி சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டு அதிர்ச்சிக்குள்ளானது. எப்படியோ சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து மீண்டு இங்கிலாந்து வெற்றிக்கனியை பறித்தது.

கேப்டன் ஜோ ரூட், துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்டோர் இங்கிலாந்தின் பேட்டிங் தூண்கள் ஆவர். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் இங்கிலாந்துக்கு சாதகமான அம்சமாகும். முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை நேற்று அறிவித்த ஜோ ரூட், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் ஆகியோருக்கு இடமில்லை என்பதை தெளிவுப்படுத்தினார். உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்த ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் மூன்று பேரும் இந்த டெஸ்டில் ஒரு சேர அடியெடுத்து வைக்கிறார்கள். இவர்கள் நிலைத்து நின்று ரன்கள் குவிக்க தொடங்கி விட்டால், இங்கிலாந்து ரசிகர்களின் கேலி-கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம். அதை சகித்துக் கொண்டு ஆட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியமாகும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் உள்ளிட்டோர் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்க காத்திருக்கிறார்கள். இதில் ஸ்டார்க்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். இங்குள்ள ஆடுகளங்களில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும். அதனால் உணவு இடைவேளைவரை எந்த அணி திறம்பட சமாளிக்கிறதோ அவர்களின் கையே ஓங்கும்.

பர்மிங்காமில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு 15 சர்வதேச போட்டிகளில் விளையாடியும் ஒன்றில் கூட ஆஸ்திரேலியா ஜெயிக்கவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘பர்மிங்காம் மைதானம் இங்கிலாந்தின் கோட்டை என்று வர்ணிக்கப்படுவது குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலும், ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தினால் போதும். மற்றபடி நாங்கள் பர்மிங்காமில் விளையாடினாலும் சரி அல்லது நிலவில் விளையாடினாலும் சரி அது பற்றி எங்களுக்கு கவலையில்லை’ என்று குறிப்பிட்டார்.

‘பவுன்சர்’ பந்து ஹெல்மெட்டோடு தலையில் தாக்கி பயங்கர அதிர்வுடன் வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று பேட்ஸ்மேன்களை சேர்க்கும் புதிய விதிமுறை இந்த தொடரில் அறிமுகம் ஆகிறது. அதாவது மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசவும் முடியும்.

இந்த போட்டியின் முடிவுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் எதிரொலிக்கும் என்பதால் இந்த முறை ஆஷஸ் தொடரில் அனல் பறக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 346 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 144-ல் ஆஸ்திரேலியாவும், 108-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. எஞ்சிய 94 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.

ஆஸ்திரேலியா: வார்னர், பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட் அல்லது மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), நாதன் லயன், கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில் அல்லது ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டியின் போது மழை குறுக்கிடவும் வாய்ப்புள்ளது.

பகிரவும்...