Main Menu

இங்கிலாந்தின் கொரோனா மரண எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் – பொரிஸ் ஜோன்சனின் உரை குறித்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

இவ்வருடத்தின் குளிர் காலப்பகுதியில் கொரோனா மரண எண்ணிக்கை இங்கிலாந்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த தனது பாராளுமன்ற உரையில் அவர் இவ்வாறு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரித்தானியாவில் திட்டமிடப்பட்டுள்ள நன்கு வார முடக்கத்திற்கான ஆதரவினை பெறுவதை தவிர குறித்த சுகாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு வேறு வழி இல்லை எனவும் பொரிஸ் ஜோன்சன் அறிவிக்கவுள்ளார்.

கொரோனா நெருக்கடியினை கட்டுப்படுத்த இங்கிலாந்து முழுவதும் வியாழக்கிழமை முதல் கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தல் விடுத்தார்.

அதனடிப்படையில் இங்கிலாந்தின் களியாட்ட விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியன மூடப்படவுள்ளன.

இந்நிலையில் குறித்த அறிவித்தலை விடுக்கவுள்ள பொரிஸ் ஜோன்சன், மக்களை வீடுகளுக்குள் முடக்குவதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் அவரது பாராளுமன்ற உரையில் தெரிவிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் பொரிஸ் ஜோன்சனின் குறித்த செயற்பாடுகளானது மீண்டும் ஓர் முடக்கத்துக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ள தொழிற்கட்சி, அவை தொடர்பிலான தாமதம் குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...