Main Menu

அவமானத்தின் சின்னம் “பெர்லின் சுவர்” உடைக்கப்பட்ட நாள் இன்று!

அவமானத்தின் சின்னம் என்று அழைக்கப்பட்ட பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்றாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வெற்றி பெற்ற நாடுகள், ஜேர்மனியை ஆளாளுக்குப் பிரித்து பங்குபோட்டன.

ரஷ்யாவும் நேசநாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஜேர்மனியின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்து, தங்கள் இராணுவத்தினரை நிறுத்தினர்.

ஜேர்மனி, கிழக்கு மேற்கு என பிரிக்கப்பட்டதுடன், ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி, கிழக்கு ஜேர்மனி என அழைக்கப்பட்டது. இதன்போது தலைநகர் பெர்லின் நகரும் பிரிக்கப்பட்டது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்தவர்கள், சுதந்திரமாக வாழ்வதற்காக மேற்கு ஜேர்மனிக்குத் தப்பிசென்றனர்.  இவ்வாறாக ஒரே வருடத்தில் மட்டும் சுமார் 35 இலட்சம் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டை மீறி, தப்பிச்சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

இதனை தடுப்பதற்காக ரஷ்யா நள்ளிரவில் சுவர் ஒன்றை கட்டியெழுப்பியது. 13 அடிக்கு எழுப்பப்பட்ட இந்த சுவரானது பெர்லின் நகரத்தின் வழியே மட்டும் 27 கிலோ மீட்டருக்கு சென்றது.

எந்த அறிவிப்பும் இல்லாமல் எழுப்பப்பட்ட இந்த சுவரால், மக்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று துன்புற்றார்கள்.

பெருந்தீயாய் ஏக்கங்கள் சுமந்த அந்தச் சுவரை, பெர்லின் சுவர் என ரஷ்யாவும், அவமானத்தின் சின்னம் என மேற்கு ஜேர்மனியும் பெயர்சூட்டிக்கொண்டன.

இதனையடுத்து பலர் எல்லை தாண்டும் முயற்சியை மேற்கொண்டதுடன், அதில் பலர் கொல்லப்பட்டும், ஏராளமானோர் கைது செய்யப்பட்டும் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதனை பனிப்போர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் போரின் இறுதியில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜேர்மனி, 1989ஆம் ஆண்டு  நவம்பர் மாதம்  9 ஆம் திகதி மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல, மக்களை அனுமதிப்பதாக அறிவித்தது.

இதையடுத்து பல மக்கள் ஏக்கங்களோடும் பேரன்போடும், சுவரில் ஏறி, மறுபக்கம் சென்றனர். ஆயிரக்கணக்கான மேற்கு ஜேர்மனியினர், இவர்களை மறுபக்கத்தில் இருந்து வரவேற்றனர். இதையடுத்து அந்தச் சுவர் மக்களால் இடித்துத் தள்ளப்பட்டது.

இந்த நாளை ஓர் அவமான சின்னம் உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாளாக மக்கள் அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...