Main Menu

அரசியல் சமூக மேடை – 12/10/2014

புலம் பெயர் நாடுகளில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் பற்றிய முரணான பரப்புரைகளை மேற்கொண்டு வரும் ஊடகங்கள் பற்றிய பார்வை

இணைந்து சிறப்பித்தவர்கள், சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் அவர்கள் மற்றும் திரு.ஜெயபாலன் அவர்கள்

 

தொடர்பு பட்ட செய்தி

 

பணம் ஈட்டுவதற்காக தமிழ் சட்டத்தரணிகள் உடற்காயங்களை ஏற்படுத்த தூண்டுகின்றனர் – Eye Sri Lanka இணையம்
கட்டுரைகள், ஜெயபாலன் த

பிபிசி பிரான்ஸிஸ் ஹரிசனின்    Sri Lanka’s Unfinished War ஆவணப்படத்தின் பிரதான சாட்சியமாக காட்டப்பட்ட நத்தினியின் வாக்குமூலம் முற்றிலும் பொய்யானது என  Eye Sri Lanka    என்ற இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது. Dead and  Missing  Person’s Parents Front ஆல் இந்தச் செய்தி வழங்கப்பட்டதாக அந்த இணையம் குறிப்பிட்டு உள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சில தமிழ் சட்டத்தரணிகள், சட்டவல்லுனர்கள் அரசியல் தஞ்ச வழக்குகளில் வெற்றி பெறுவதற்காக உடற்காயங்களை ஏற்படுத்துமாறு தாங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்களைத் தூண்டிவிடுவதாக அந்த இணையம் மறைமுகமாகக் குற்றம்சாட்டி உள்ளது. இவ்வாறான சட்ட உதவியை 6500 – 7500 பவுண் செலவில் தேவா, தீபன், ஜனா, ரவி, மதி, அனோஜா, நாகா அன் கொம்பனி, வாசுகி ஆகியோர் உட்பட சிலர் மேற்கொண்டு வருவதாகவும் அவ்விணையம் குற்றசம்சாட்டி உள்ளது.

சட்டத்தரணிகளின் ஆலோசணையுடன் உடற்காயங்களை ஏற்படுத்துவதற்கு பல இடங்கள் இருப்பதாகக் குறிப்பிடும் Eye Sri Lanka, சவுத்என்ட் லேன் புரொம்பிளியில் உள்ள ரிஆர்ஓ உடன் தொடர்பான பிரகாஸ் கோபாலசிங்கம் என்பவரின் வீட்டிலும் இச்சித்திரவதை மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளது.

அரசியல் தஞ்சம் பெற்றுத் தரப்படும் என்ற உறுதிமொழியுடன் அரசியல் தஞ்சம் கோருபவர்களின் உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்தச் சித்திரவதைகளை பிரித்தானிய அதிகாரிகள் விசாரித்து அது எங்கே நடைபெறுகிறது என்பதை அறிவதுடன் உலகளவில் இது எவ்வளவுதூரம் பரவி உள்ளது என்பதையும் அறிய வேண்டும் எனக் கேட்டுள்ளது.

இவ்வாறான உடன்பாட்டுடன் கூடிய சித்திரவதைகள் சிகரட் கட்டைகளினால் சுட்டும், இருப்புக் கம்பிகளை நெருப்பில் காய்ச்சி உடலில் குறி வைத்தும், கூரிய ஆயுதங்களால் வெட்டியும் மேற்கொள்ளப்படுகிறது.

சட்டத்தரணிகள் தொடர்பான இந்தக் குற்றச்சாட்டை சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் முற்றாக மறுத்துள்ளார். இச்செய்தி தொடர்பாக தேசம்நெற் வாசுகி முருகதாஸ் உடன் தொடர்புகொண்ட போது,  இது இலங்கை அரசாங்கம் தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கு மேற்கொள்கின்ற திட்டமிட்ட நடவடிக்கை எனத் தெரிவித்தார். இதுதொடர்பான ஒரு பத்திரிகைச் செய்திக் குறிப்பு ஒன்றை குறறம்சாட்டப்பட்ட சட்டத்தரணிகள் வெளயிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தரர்.

2013 நவம்பரில் கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக பிபிசி யில் ஒளிபரப்பப்பட்ட l Sri Lanka’s Unfinished War  ஆவணப்படத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு தப்பிய, அதனை வெளியே சொல்ல முன்வந்த முதலாவது பெண் நந்தினி என பிரான்ஸிஸ் ஹரிசன் நந்தினியை அறிமுகப்படுத்துகிறார்.

தனது சாட்சியத்தில் நந்தினி  பின்வருமாறு கூறுகிறார்,” 5 பேர், 6 பேர் வந்தவங்கள் வானில் என்னோடை கதைக்கப்போறன் என்று சொல்லி. அம்மாவை விடேல்லை கதைக்கிறதுக்கு. அம்மாவை இழுத்து தள்ளி விழுத்திப் போட்டு என்னை இழுத்துக்கொண்டு போனாங்கள். கண், கை எல்லாத்தையும் கட்டிப் போட்டு தூக்கிப் போட்டவங்கள். கிட்டத்தட்ட 5 மணித்தியாலம் இருக்கும் என்னை எங்க கொண்டு போறாங்கள் என்று ஒன்றும் தெரியாது. கொண்டுபோய் ஒரு ரூமுக்குள் போட்டவங்கள். போட்ட உடனேயே மாறி மாறி அந்த காவலுக்கு நிக்கிறவங்களே என்னை நித்திரை கொள்ளவிடாமலேயே என்னை ரேப் பண்ணத் தொடங்கிட்டான்கள். அடுத்தநாளும் விடிய வந்து அதே வேலைதான். ரேப் பண்ணிக்கொண்டே இருப்பாங்கள். என்னால தாங்கவே முடியேல்லை. சொல்லவே ஏலாம இருக்குது. (இச்சமயத்தில் நந்தினி கண்கலங்கி அழுகின்றார்.) ஆமி உடுப்போடதான் வருவாங்கள். நித்திரையில்லை அங்க நடந்ததையெல்லாம் யோசிக் யோசிக்க நித்திரையில்லை. மனம் குழம்பிக்கொண்டே இருக்கு. சாகோனும் போல இருக்கு. இருக்க விருப்பமில்லாமல் இருக்கு.” என்று நந்தினி குறிப்பிட்டார்.

நந்தினியின் உடலில் சிகரட் கட்டையால் சுட்ட 30 உடற்காயங்கள் இருப்பதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவித்து இருந்ததாகவும் அவருடைய பெண்ணுறுப்பிலும் இக்காயங்கள் இருந்ததாகவும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Eye Sri Lanka இணையம் நந்தினியின் இயற்பெயர் முத்துராசா நந்தினி (25) என்றும் இவர் யாழ் நல்லூரைச் சேர்ந்தவர் என்றும் இவர் எல்ரிரிஈ இனால் 1995ல் அனுப்பி வைக்கப்பட்ட உகன் பத்மராசா என்ற எல்ரிரிஈ செயற்பாட்டாளரை 2000ஆம் ஆண்டு இந்தியாவில் மணம் முடித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளது. தற்போதும் இலங்கையில் உள்ள நந்தினியின் தாயாரின் தகவலின்படி நந்தினி 2012இலேயே பிரித்தானியாவுக்கு சென்று விட்டதாக அந்த இணையம் தெரிவிக்கிறது. இவர் சட்டவிரோதமாகவே இலங்கையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அச்செய்தி விசா பெற்று வெளியேறி இருந்தால் இந்த ரேப் கதை வந்திருக்க மாட்டாது எனத் தெரிவிக்கிறது.

இலங்கையில் இருந்து வெளியேறுகின்ற அரசியல் தஞ்சம் கோருவோரிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பல்களை வெளிப்படுத்துவதற்காக தாங்கள் நந்தினியின் தாயாரை தொடர்புகொண்டதாக அவ்விணையம் கூறுகின்றது. அவர்கள் இந்த தஞ்சம் கோருவோர் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு உடற்காயங்களை ஏற்படுத்தவும் உடன்பட வைக்கின்றனர் என்றும் இதன்மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் புதியது என்றும் அது இலங்கை பாதுகாப்புப் படைகளால் ஏற்படுத்தப்பட்டது என்பதை சொல்ல வைக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டுகின்றது.

2012இல் இலங்கையை விட்டு வெளியேறிய நந்தினியை ஐந்து அல்லது ஆறு இலங்கை இராணுவத்தினர் வீட்டிலிருந்து கொண்டு சென்று எப்படி ரேப்பண்ணி இருக்க முடியும் எனவும் அவ்விணையம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் 2006 முதல் 2012 வரை நந்தினி யாழ்ப்பாணத்தில் அவருடைய தாயுடன் இருக்கவில்லை என்றும் நந்தினி கொழுப்பிலேயே வாழ்ந்ததாகவும்  Eye Sri Lanka தெரிவிக்கின்றது.

அவ்விணையம் நந்தினி தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், நந்தினி யுகே செல்வதற்கு பல தடவைகள் விசா பெறுவதற்கு முயன்றபோது அவை வெற்றியளிக்காததால் அவர் ரேப் கதையைச் சொல்லி அரசியல் தஞ்சம் பெறுவதே அவரின் வழியாக இருந்தது என்க்குறிப்பிட்டு உள்ளது.

இவ்வாறான அரசியல் தஞ்சங்களுக்கான உதவிகள் குறைந்த செலவில் கிடைப்தில்லை எனக்குறிப்பிட்டுள்ள அந்த இணையம் இந்தச் செயன்முறையை ஆரம்பிக்க 1500 பவுண்களும் அதனைத் தொடர்ந்து தஞ்சக் கோரிக்கையில் வெற்றிபெற 5000 – 6000 பவுண்கள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

வாசுகி முருகதாஸிடம் நீங்கள் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை, அரசியல் தஞ்ச வழக்குகளில் வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் அவர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்துமாறு தூண்டினீர்களா? அல்லது அவ்வாறு செய்யுமாறு ஆலோசணை வழங்கினீர்களா எனக் கேட்ட போது? தான் ஒரு போதும் இவ்வாறான செயல்களைத் தூண்டுவதில்லை என்றும் அவ்வாறு ஆலோசனைகளை ஒருபோதும் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். அப்படி யாராவது இருந்தால் அவர்கள் முன்வந்து சொல்லட்டுமே” என்றும் அவர் சவால் விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னுடைய அரசியல் செயற்பாடுகள் காரணமாக (வாசுகி முருகதாஸ் நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ பிரித்தானியா வந்து திரும்பிய அன்று அவரைக் கைதுசெய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டதாக செய்திகள் வந்திருந்தது.) இலங்கை அரசாங்கம் தன்னை பழிவாங்குமுகமாக இக்குற்றச்சாட்டை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் நந்தினியை தான் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனத் தெரிவித்த வாசுகி முருகதாஸ் நந்தினியின் வாக்குமூலத்தை தான் நம்புவதாகவும் நந்தினியின் தாயார் மிரட்டப்பட்டோ அல்லது பயத்தின் காரணமாகவோ தவறான தகவல்களை வழங்கி இருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சம் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை அமூல்படுத்த அரசியல் தஞ்சம் கோருபவர்கள் நினைக்க முடியாத அபாயகரமான நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
திறமையற்ற சட்டத்தரணிகள் சிலர் தங்கள் வழக்குகளை வெல்வதை இலகுவாக்குவதற்காகவும் உண்மையில் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தங்கள் வழக்குகளை வெல்வதற்காகவும் இவ்வாறான சுய ஒப்புதலுடனான சித்திரவதைகளை லண்டனில் அனுபவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது.

மாணவர் வதிவிட உரிமை குறுகிய காலத்தில் காலாவதியாகும் நிலையில் இருந்த ஒருவர் சட்டத்தரணி ஒருவரிடம் ஆலோசனை பெற்ற போது அவர் உடலில் காயங்கள் ஏதாவது இருந்தால் தான் அரசியல் தஞ்சத்துக்கு விண்ணப்பித்து வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆலோசனையைக் கேட்டவர் தனது தாயாருக்கு சுகவீனம் எனத் தெரிவித்து இலங்கை சென்று மீண்டும் பிரித்தானியா வந்து உடலில் காயங்களை ஏற்படுத்திவிட்டு அரசியல் தஞ்சம் கேட்பது என்ற முடிவுடன் இலங்கை சென்றார். ஆனால் அவர் இலங்கையிலேயே தனது மைத்துனரைக் கொண்டு இருப்புக் கம்பியால் முதுகில், ஆண்குறியில் எல்லாம் குறிவைத்துவிட்டு ஹீத்ரோ விமான நிலையத்தில் அரசியல் தஞ்சம் கோரி அவருக்கு அரசியல் தஞ்சம் இருவாரங்களில் வழங்கப்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின் பிரித்தானியாவில் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது.

ஆனால், இலங்கை இராணுவத்தால் சகோதரன் படுகொலை செய்யப்பட்டு, புலிகளால் தாயார் படுகொலை செய்யப்பட்டு அரசியல் தஞ்சம் கோரிய இன்றும் அரசியலில் ஈடுபடும் ஒருவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக உள்துறை அமைச்சு அகதி அந்தஸ்து வழங்க மறுத்து வருகின்றது.

நிர்க்கதியான அல்லது பாதுகாப்பான எதிர்காலத்தை நினைத்து அரசியல் தஞ்ச விண்ணப்பதாரிகள் சிலர் சில சட்டத்தரணிகளின் தவறான வழிநடத்தல்களினால் மேற்கொள்கின்ற இவ்வாறான துஸ்பிரயோக நடவடிக்கைகள் மிக ஆபத்தான சமூகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை இலங்கை அரசு தமிழ் மக்களின் நியாங்களை நிர்மூலமாக்குவதற்கு மிக லவகமாகப் பயன்படுத்த முனைந்துள்ளது.

 – நன்றி தேசம்

பகிரவும்...