விண்ணை பிளந்த அரோகரா கோஷம் – சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. முருகப் பெருமானான சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக வென்பட்டு உடுத்தி, வெட்டிவேர் மயில் தோகை மாலை அணிந்து கடற்கரைக்கு வருகை தந்தார்.
அதன்படி, முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்றுமுறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.54 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.
அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 5.09 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து 5.22 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார்.
பகிரவும்...