வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள வாக்குப்பதிவு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றார். அந்த அறிக்கைகள் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். பறக்கும்படை சோதனை இனி அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
ரஜினிகாந்தின் வலது கையில் மை வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது பொதுவான தவறுதான் என்றார்.
தமிழகத்தில் 45 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக கூறிய அவர், வாக்கு எண்ணும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அதனை அரசியல் கட்சியினர் கண்காணிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.