Main Menu

வழக்கத்துக்கு மாறாக சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்தில் தினசரி மின் தேவை 30% அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருவதால், தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். ஆனால், கடந்த மே மாதம் 2-ம் தேதி தினசரி மின்தேவை 20,830 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்சபட்ச அளவாக உள்ளது. இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக கடந்த 15 நாட்களாக கடும் வெயில் வாட்டி வருவதால் தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, கோடை காலத்தில் தான் தினசரி மின் தேவை அதிகரிக்கும். மற்ற சமயங்களில் குறைந்திருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தினசரி மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட் முதல் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும்.
ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக, இம்மாதம் 1-ம் தேதி 13,709 மெகாவாட்டாக இருந்த தினசரி மின் தேவை தற்போது 17,974 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் மின் தேவை உயர்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனினும், அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, காற்றாலை மூலம் 80 மில்லியன் யூனிட்டும் மற்றும் மத்திய அரசிடமிருந்து 100 மில்லியன் யூனிட்டும் மின்சாரம் தினமும் கொள்முதல் செய்யப்பட்டு வரப்படுகிறது.
மின் தேவை மேலும் அதிகரித்தால் அதை பூர்த்திசெய்ய அனல்மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும்.மேலும், சூரியசக்தி மூலம் தினசரி 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், மின்தடை ஏற்படாத அளவுக்கு மின்விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.