Main Menu

வயநாடு தொகுதியில் 3-வது கட்ட பிரசாரம்.. பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல்காந்தி வாக்கு சேகரிப்பு

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 23-ந்தேதி, தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் ரோடு-ஷோ நடத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அதன்பிறகு கடந்த 28-ந் தேதி 2-வது கட்டமாக பிரியங்கா காந்தி தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2 நாட்கள் வயநாடு தொகுதிக்குட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அவர் பொதுக்கூட்டங்களில் பேசி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் 3-வது கட்டமாக அவர் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். அவருடன் ராகுல் காந்தியும் இணைந்து வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். இன்றும், நாளையும் அவர்கள் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இருவரும் பங்கேற்று பேச உள்ளனர்.

2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புவார் என்றும், பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார் எனவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

பகிரவும்...
0Shares