Main Menu

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பை இழந்துள்ளனர் – விநாயகமூர்த்தி முரளிதரன்

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நேற்று மாலை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,

நான் வாக்களிக்க சென்ற பின்னர் தெரிவித்திருந்தேன் 52வீதம் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்படுவார் என. அதேபோன்று தற்போது நடந்துள்ளது. அதனைவிட கூடுதலான வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

வடகிழக்கு தமிழ் மக்கள் சிறந்த வாய்ப்பினை இழந்திருக்கின்றார்கள். கோத்தாபய ராஜபக்ஸ நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணங்களைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி மக்களை திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்துள்ளனர்.

தமிழ் மக்கள் கோத்தாபயவுக்கு வாக்களித்திருந்தால் நாங்கள் உரிமையுடன் எங்களது விடயங்களை கேட்டு சாதிப்பதற்கான நிலையிருந்தது. மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வரவிருக்கின்றார். பாரபட்சமற்ற வகையில் விடயங்களை செய்வார்.

இருந்தபோதிலும் தமிழ் மக்கள் புத்திசாதுரியமாக செயற்படவேண்டிய காலமாகவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிதைந்துபோன தலைமைகளை நம்பிக்கொண்டு வாக்குகளை வீணடித்துக்கொண்டிருந்தால் எதுவித நன்மையினையும் தமிழ் மக்கள் பெறப்போவதில்லை.

இந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய தோல்வியடைந்திருந்தால்  கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். சஜித்துடனேயே அத்தனை தீவிரவாதம் பேசும் முஸ்லிம் தலைவர்களும் இருந்தார்கள். அதனைத்தெரிந்துகொண்டும் கிழக்கில் இருக்கின்ற பெரும்பான்மையான தமிழ் மக்கள் கோத்தாபயவுக்கு வாக்களிக்கவில்லை. இனிவரும் காலத்திலும் இவ்வாறான தவறுகளை தமிழ் மக்கள் விடுவார்களானால் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியாகும்.

கல்முனை மக்களை நான் குறிப்பாக பாராட்டியாகவேண்டும் அவர்கள் கூடுதலாக ஆதரித்துள்ளனர். நிச்சயமாக கல்முனை பிரிதேசம் தரமுயர்த்தப்படும் அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை  அதேபோன்று தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் நாமும் அதற்கான ஊன்றுகோளாக சேர்ந்து செயற்படுவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

தமிழ்தேசிய கூட்மைப்பு தமிழர்களை திசைதிருப்பி காலம் முழுக்க தமிழ் மக்களை குழிதோண்டிப்புதைக்கும் செயலில் ஈடுபடுகின்றார்களோ தவிர மற்றும் படி விமோசனமான சிறந்த பலனைப்பெறக்கூடிய எந்தவொரு செயலையும் இவர்கள் செய்தது கிடையாது.

எமது ஆட்சியானது மிகவும் சிறந்தமுறையில் எமது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் சிறந்தமுறையிலும் சமாதானமான முறையிலும் நடைபெறும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷவினையும் மகிந்த ராஜபாஸவினையும் மிகவும் மோசமான முறையில் தேர்தல் மேடைகளில் விமர்சித்தவர்கள்.

அவர்கள் தற்போது மீண்டும் எமது வெற்றியின் பின் இணைய நினைத்தால் எமது கண்டனத்தையும் எதிர்ப்புக்களையும் தெரிவிப்போம் என்ன முகத்தோடு அவர்கள் இணைந்து கொள்வார்கள் அப்படி இணைய நினைத்தால் அவர்களை அரசியல் விபச்சாரிகள் என்றே கூறுவேன்.  

தற்போது மலர்ந்திருக்கும் இந்த அரசாங்கத்திலே தமிழ் மக்களுக்கு எந்தவித பழிவாங்கலோ நடைபெறாது மகிந்தராஜபகக்ஷவின்  காலத்தில் அதிகமான அபிவிருத்திகள் தமிழ் பிரதேசத்தில் நடந்துள்ளது அதே போன்று மீண்டும் அபிவிருத்திகள் சேவைகள் தொடரும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து கொண்டால் நாம் நிச்சயமாக வரவேற்போம் தமிழ் மக்களை காப்பாற்றவும் அபிவிருத்தி செய்யவும் எமக்கு அதிகாரம் தேவை அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்துகொண்டு அமைச்சுப்பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவார்களாக இருந்தால் அதைநாம் வரவேற்போம்.

வட கிழக்கு இணைப்பு என்பதை என்னால் ஆழமாக இவ்விடத்தில் கூறமுடியாது காரணம் வட கிழக்கு ஏற்கனவே சட்டரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அதிலே பல சட்டச்சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...