ரயில் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார் என்று தெரிவித்தே தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை பொல்லுகள் மற்றும் போத்தல்களால் தாக்கியுள்ளதாக யாழ்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்றது.
கொக்குவில் சந்திக்கு அண்மையாக உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நின்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், அவரைத் தாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
ஆவா குழுவைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிப்பதற்காக கொக்குவில் ரயில் நிலையத்துக்குச் சென்று இருப்பார்கள்.
அவர்களுக்கு இடம் கொடுத்து நட்பு வைத்திருந்தமைக் குறிப்பிட்டே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரியைத் தாக்கியவர்கள் தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவத்தைடுத்து கொக்குவில் சந்தியை அண்மித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.