ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
பிரான்ஸ் நாட்டிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட ரஃபேல் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா வந்தடையவுள்ளன.
குறித்த விமானங்கள் பிற்பகல் 2 மணி அளவில் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை அன்று புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்தாப்ரா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது.
இவ்வாறு தரையிறக்கப்பட்ட குறித்த விமானங்கள் காலை 11.00 மணிக்கு அங்கிருந்த புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை வந்தடையவுள்ளன. அதன் பிறகு பிற்பகல் 2.00 மணிக்கு ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடையவுள்ளது.
அத்துடன் ரஃபேல் போர் விமானங்களின் வருகையை முன்னிட்டு அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் 05 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் வரும் நேரத்தில் எந்த ட்ரோன்களும் பறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.