யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார்.
கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
எனினும் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், நேற்று மே மாதம் 5 ஆம் திகதி பின்னிரவே தொலைநகல் மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்படும் வரை, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். சற்குணராஜா அல்லது யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஆகிய இருவரில் ஒருவரை பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிப்பதற்கான பரசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அறிய முடிகின்றது.
காரணமேதுமின்றி பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை மீளப் பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தினை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.