யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றி வளைத்து பாரியசோதனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இத் தேடுதல் நடவடிக்கையின் போது செய்தி சேகரிப்பதற்கு பல்கலைக்கழகத்திற்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பல இடங்களிலும் பாரிய சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் அதே போன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலையே இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகம் சுறறிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்டு வருகின்ற சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையால் அப்பகுதிகளில் ஒரு பதற்றமான சூழலும் ஏற்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.