முஸ்லிம்களுக்கு எதிராக அழுத்தம்
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் மற்றும் மத ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாங்கள் அதிகளவு கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்.
எனவே இந்த நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரிட்டன் என்பன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ரொமேனியா சவிட்சர்லாந்து நோர்வே நாடுகளின் உடன்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நாடுகளின் தூதுவர்கள் நேற்றுக்காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தியபோது இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இந்த நிலையிலேயே மேற்கண்ட அறிக்கை வெ ளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியன அழுத்தங்கள் தொடர்பில் நாங்கள் அதிகளவு கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்.
தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் உறுதிபடுத்தப்படாத குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெ ளியிடுகின்றமை பொறுமையின்மையை தூண்டுவதாக அமைந்துள்ளன. இது தொடர்பில் பிரதமருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம்.
இதன்போது வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிராகவும் மதங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்றோம்.
எனவே சகல சமூகங்களுக்கு இடையிலும் சமாதானத்தை பேணி நிலைநிறுத்துவது தொடர்பில் அனைத்து இலங்கையர்களுடனும் நாம் பக்கபலமாக இருக்கின்றோம்.
சமய தலைவர்கள் அவர்களை வழி நடத்தி வன்முறைகளுக்கு எதிராக குரலெழுப்பவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
அனைவருக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் மத அல்லது இனவேறுபாடின்றி பரஸ்பர மதிப்பு சகிப்பு மற்றும் சமமாக நடத்தல் போன்றவற்றுக்கான விடயங்களில் அர்ப்பணிப்பை வெ ளிக்காட்டுமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களிடமும் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்றைய தினம் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது அமைச்சரவையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்தமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கவலை வெ ளியிட்டுள்ளனர்.
இச் சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இச் சந்திப்பின்போது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. . “
மிலேச்சத்தனமான அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அதற்கு நிதியுதவி செய்வதற்கு தயார் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் அண்மையில் ஊடகங்களில் வைராக்கிய கூற்றுக்கள் வெளியானதாக தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவ்வாறான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும் அமைச்சரவையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்தமை தொடர்பில் கவலை வெ ளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அவர்களை மிக விரைவில் மீண்டும் அமைச்சரவையில் இணைந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.