முதல் முறையாக பிட்காயின் மதிப்பு ரூ.85 லட்சத்தை தாண்டியது
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ந் தேதி 47-வது அதிபராக பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பது இது 2-வது முறையாகும்.
இந்த நிலையில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்ததால் தங்கம், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. அத்தனையையும் விட கவனம் பெற்றது கிரிப்டோகரன்சியின் விலை உயர்வு.
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம் ) என்று இருந்தது. விரைவில் 1 லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலரை இன்று தொட்டது. இந்திய ரூபாயின் மதிப்புபடி 85 லட்சத்தை தொட்டது. இன்று எட்டியுள்ள புதிய உச்சம் கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல் முறையாக 1 லட்சம் அமெரிக்க டாலரை தொட்டது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற 4 வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் நாளில் கிரிப்டோ கரன்சி 69,374 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
பகிரவும்...