Main Menu

மாணவி கடத்தல் சம்பவம் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் 18 வயது பாடசாலை மாணவியான பாத்திமா ஹமீரா என்ப​வரை கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர், பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் திங்கட்கிழமை (13) காலை இருந்த போது ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (12)இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த மாணவியை கடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணி புரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கூறியுள்ளார்.
இதேவேளை கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

கெலிஓயாவில் மாணவி கடத்தல் சம்பவம்

கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ, சனிக்கிழமை (11) அன்று பகிரப்பட்டுள்ளது. அதிலொரு மாணவி தப்பிச் சென்றுள்ளார். எனினும், வாகனத்துக்குள் இழுத்து போடப்பட்ட மாணவியை காப்பாற்றும் முயற்சியில் இவ்வீதியில் சென்றவர் முயற்சித்துள்ளமை அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அவ்விரு மாணவிகளும் வீதியோரத்தில் நடந்து வந்துகொண்டிருந்த போது கறுப்பு நிற வாகன​மொன்று அம்மாணவிகளை நோக்கி பயணித்துள்ளது. அவ்விரு மாணவிகளும் வாகனத்துக்கு அருகில் வந்ததும் பக்க கதவை திறந்த ஒருவர், அதிலொரு மாணவியை இழுத்து வாகனத்துக்குள் தள்ளியுள்ளார்.
மற்றைய மாணவி, தன்னுடைய புத்தக பையை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, தாங்கள் வந்த பக்கத்துக்கு ஓடிவிட்டார். அந்த வாகனமும் அதே திசையில் பயணித்துள்ளமை வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன.
பகிரவும்...
0Shares