Main Menu

மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் சந்திப்பு

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா சந்தித்துகலந்துரையாடியுள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் கைது செய்து, 2017 ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவை தூதரக ரீதியில் சந்திக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியதையடுத்து அந்நாட்டுக்கான இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேற்று (திங்கட்கிழமை) குல்பூஷன் ஜாதவ்வை இஸ்லாமாபாத்தில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தார்.

இந்தசந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியத் தரப்பு அதிகாரி ஒருவர் குல்பூஷணை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்

இதேவேளை, சர்வதேச நீதிமன்றம், இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்து ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி உத்தரவிட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வியன்னா ஒப்பந்தத்தின்படியும் சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளபடியும் குல்பூஷன் ஜாதவுக்கு இந்தியத் தூதரக உதவிகள் அளிக்கப்படும். இது பாகிஸ்தான் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டதாக இருக்கும் என்று பாகிஸ்தான் தரப்பு கடந்த 1 ஆம் திகதி அறிவித்தது. இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு, இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...