மன்னார் மாவட்ட சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், உயர் கல்லூரி மாணவர்கள் என இளைய சமூகத்தின் பங்களிப்பினை மேம்படுத்தும் நோக்குடன் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் இன்று குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
உயிலங்குளம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் பங்களிப்புடன் குறித்த விழிப்புணர்வு நிகழ்வும், மரம் நடுகையும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வானது வாழ்வுதய சூழல் பாதுகாப்புப் பிரிவின் இணைப்பாளர் யேசுதாசன் அவர்களின் ஒழுங்கமைப்பில் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் கல்வி இணைப்பாளர் மோகன் குரூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி அருள் ராஜ் குரூஸ் அடிகளார் கலந்து கொண்டதுடன் மிசறியோ நிறுவனத்தின் நிதியின் ஊடாக அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கத்தினையும், இளையோராக நமது சூழலை பாதுகாப்பதில் உள்ள நடைமுறை சாத்தியங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
சூழலுக்கு மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், அழிவுகள் அந்த அழிவுகளை கட்டுப்படுத்துவதற்காக உள்ள சட்டங்களின் பயன்பாடுகள் பற்றி திட்ட இணைப்பாளரினால் விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...