மனித உரிமை மீறல்கள்: அமெரிக்காவிடம் இலங்கை அரசு முக்கிய கோரிக்கை
இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டாமென அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவின் ஊடாக குறித்த கோரிக்கையை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபையில், இலங்கை குறித்த யோசனையொன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் முன்வைத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி, மேலும் 4 உறுப்பினர்கள் ஊடாக இலக்கம் 413 என்ற குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கொண்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை கடுமையாக எதிர்க்கின்றோம். மேலும் தீர்மானத்தின் நோக்கம் கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றன.
இந்த தீர்மானம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன் இலங்கை நாட்டின் தன்மையைக் கூட கேள்விக்குள்ளாக்குகிறது.
‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புகள், நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும் இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், இலங்கையின் சிதைவை ஆதரிப்பதற்கும் பங்களிக்கிறது.
இதேவேளை காங்கிரஸிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்நோக்கி கொண்டுச் செல்வதற்கான இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியா தொடர்பான உப குழுவின் பிரதிநிதிகள்,கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மற்றும் காங்கிரஸ் சபை ஆகியவற்றில் குறித்த யோசனையை முன்வைக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
மேலும் அந்த யோசனையில் உண்மைக்கு புறம்பான உறுதிப்படுத்தப்படாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபைக்கு இலங்கை அறிவித்துள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.