மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்ஸ்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் சொத்துகளை பிரான்ஸ் அரசு முடக்கியது. சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த மசூத் அசாரை சேர்க்க சீனா முட்டுக்கட்டை போட்டதை தொடர்ந்து, பிரான்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், இந்தியாவுக்கு எப்போதும் பிரான்ஸ் அரசு துணை நிற்கும் என்று தெரிவித்திருந்தது.

ஜம்மு – காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்.14ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா, மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மசூத் அசார் பெயரை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எந்த கருத்தையும் சீனா தெரிவிக்கவில்லை. இதனால் சீனாவின் முடிவு இந்தியாவை அதிருப்தியடைய வைத்தது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது. பிரான்சு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !