மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளனர்.
இதனால், யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து இடம்பெறவில்லை.
குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொது சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
அத்தோடு, பாடசாலைகள் வழக்கம் போல், கல்வி செயற்பாட்டுக்காக திறக்கப்படடுமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதும், மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை.
வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெறுகின்றது.
அரசியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரும்பும் தமிழ் மக்களின் வலிமையைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இந்த எழுக தமிழ் பேரணியில் 35 இற்கு மேற்பட்ட, அமைப்புகள் மற்றும் கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களை ஏற்றி வருவதற்காக 35 இற்கும் அதிகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக, சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, சிறிலங்கா போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்தும், யாழ். பல்கலைக்கழக வாயிலில் இருந்தும், இரண்டு இடங்களில் இருந்து ஆரம்பித்த பேரணி யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையும்.
அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.
இன்று நடைபெறும் எழுக தமிழ் பேரணிக்கு, யாழ்ப்பாண ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆ.ர்எல்.எவ். ஆகிய கட்சிகள் இந்தப் பேரணி ஒழுங்கமைப்பில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.
இதனிடையே எழுக தமிழ் பேரணியில் தமது கட்சியின் பெயரோ, சின்னமோ பயன்படுத்தப்படாது என்றும், தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தியே இந்த பேரணி நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் சார்பின்றி அனைவரும் இதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டித்து போராட்டத்தை நடத்தி, இந்த நிகழ்வை வலுப்படுத்துமாறு தமிழ் மக்கள் பேரவை கோரியிருக்கிறது.