போராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்!
பிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டின் பைசன்ரைன்(Byzantine) ஓய்வூதிய முறையை மாற்றியமைக்கும் திட்டங்களை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில் பிரான்ஸின் பொதுப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பரிஸில் உள்ள ரயில்வே மற்றும் மெட்ரோ நிலையங்கள் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த வேலை நிறுத்தத்துடன் பரிஸ் தலைநகர் வழியாக பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.