“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பெரும் பாவம்” – பிரதமர் மோடி
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவங்கள்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடந்த லட்சாதிபதி சகோதரி சம்மேளன நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு நாட்டிற்கு எப்போதும் முன்னுரிமையானது. செங்கோட்டையில் இருந்து நான் பலமுறை இந்த விஷயத்தை எழுப்பியுள்ளேன். இன்று நாட்டில் உள்ள எனது மகள் மற்றும் சகோதரிகளின் கோபத்தினை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்துக்குக்கும் நான் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம். குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது. அவர்களுக்கு எந்தவகையில் உதவி செய்பவர்களையும் விட்டு விடக்கூடாது. மருத்துவமனை, பள்ளிகள், அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் என எந்த நிலையில் குற்றங்கள் நடந்திருந்தாலும் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேல்மட்டத்தில் இருந்து கீழ்நிலை வரை இந்த செய்தி தெளிவாக சொல்லப்பட வேண்டும். அரசுகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், பெண்களின் கண்ணியம் மற்றும் உயிர்களை பாதுகாப்பது அரசு மற்றும் சமூகமாக நம் அனைவரின் பொறுப்பாகும்” என தெரிவித்தார்.