புதிய கூட்டணி நம்பிக்கையில்லை – ஜீ.எல். பீரிஸ்
2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பங்கேற்காமையானது நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் அடுத்தமாதம் 9 ஆம் திகதி மீண்டும் பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜீ.எல்.பீரிஸ், குறுகிய நோக்கத்த்துடன், தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் கூட்டணி நிலையானதாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக ஸ்ரீலங்கா கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்துவரும் வாரங்களில் இதற்கான சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறைமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கொள்கை அடிப்படையிலான 20 விடயங்களின் அடிப்படையில் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் குறித்த விடயங்கள் 25 ஆக அதிகரிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.