‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் மே 24ம் தேதி வெளியீடு – படக்குழு அறிவிப்பு
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் வரும் மே 24ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.
மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. மேலும் தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியிட தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் (மே 23) நாளுக்கு, மறுநாள்(மே 24) வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறுகையில், ‘ஒரு இந்திய குடிமகனாக சட்டத்தினை நான் மதிக்கிறேன். இந்த படம் வெளியிடப்படும் என கூறியதில் இருந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
இனிமேல் எவ்வித சர்ச்சைகளும் எழாது என நம்புகிறேன். மேலும் வரும் மே 24ம் தேதி எந்த பாதிப்பும், தடையும் இன்றி படம் வெளியிடப்படும் எனவும் நம்புகிறேன்’ என கூறினார்.