பல்கலைக்கழக மாணவர்கள் கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையானஅதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திரு.விக்னேஸ்வரன், நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரைத் தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து இராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் ஒரு துன்பியல் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முற்பட்டுள்ளதை அறியாதிருக்கும் இவர்கள் மேல் பரிதாபம் மேலோங்குகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது.
இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.