பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மகேசன்
யாழ்ப்பாணத்தில் பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அம்மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் யாழ்ப்பாணத்திலும் அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
அந்தவகையில் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் பொது போக்குவரத்து முற்றாக தடைபடும், கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே இத்தகைய செயற்பாட்டுக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை வழங்க வேண்டும். அத்துடன் பயணத்தடை என்பது பொதுமக்கள் நிலைமைகளை புரிந்து தங்களின் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதாகும்.
இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை இருக்காது. வைத்தியசேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உள்ளோர் மாத்திரம் பயண கட்டுப்பாட்டுடன் வெளியில் சென்று வர முடியும்.
இதேவேளை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஆகவே யாழிலும் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.