Main Menu

பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக்கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டது

தமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஏனைய தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் தவறாக தெரிவதாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (09.04.19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரான பிரதி காவற்துறை மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து அவரது சட்டத்தரணி சவாலுக்கு உட்படுத்தியுள்ள விடயங்களை ஆராய்ந்தபோதே நீதவான் ரங்க திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கிக்கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டமைந்துள்ளதென தெரிவித்துள்ளார்.

முன்னர் தமிழர்களையும், தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் தற்போது ஒரு தரப்பினர் கைது செய்யப்படும்போது மட்டும் அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்துவது என, தீர்மானிப்பது யார், எவ்வாறு அதனை தீர்மானிப்பது என்பது குறித்து சட்டத்தில் எந்த வழிகாட்டல்களும் இல்லை என்றும் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் குறித்தும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல் செய்யப்பட வேண்டும் என்பதை யார், எவ்வாறு தீர்மானிப்பது என்பது குறித்து எந்த அறிவுரையும் சட்டத்தில் இல்லை என்றும் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related