Main Menu

பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் – தங்க தமிழ்ச்செல்வன்

தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல. மக்கள் வெறுக்கும் அணி.

எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடையும். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் கோபத்துடன் பேசி வருகிறார்கள்.

மதுரையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கோபமாக பேசி இருக்கிறார். இது ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறபோது அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவும்.

இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார்.

தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளன. ஆனால் தோல்வி பயம் காரணமாக தேர்தல் விதிமுறைகளையும் மீறி விட்டு அமைச்சர்களும், அரசு கொறடாவும் சபா நாயகரை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.