பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு,
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ஒரு தரப்பினர் மீது சேறு பூசும் நோக்குடன் யாரும் எதையும் குறிப்பிட முடியும். எனினும் ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறிய வகையில் குறித்த அவ் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதனை ஆராயாமல் குறித்த செய்திகளினை வலைப்பக்கங்களும், அச்சு ஊடகங்களும் பிரசுரித்தமை எமக்கு மனவேதனையினை ஏற்படுத்துகின்றது.
தமிழ்த் தேசிய அடக்கு முறைகளிற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதால் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு தரப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் உருவெடுப்பதனை விரும்பாத தரப்புக்கள் திட்டமிட்ட வகையில் எம்மீது சேறு பூச முயல்வதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டுக் கொண்டிக்கும் வலைப்பக்கங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்கமாட்டோம்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளிற்கு எதிராக இறுக்கமான சட்ட நடைமுறைகள் உள்ளதால் பகிடிவதைகள் எல்லை மீறிய வகையில் இடம்பெறுகின்ற போது பல்கலைக்கழக நிர்வாகம் முறையான ஒழுக்காற்று விசாரணைகளினை முன்னெடுத்து தண்டனைகள் வழங்கி வருகிறது.
முதலாம் வருட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல்கள் இடம்பெற்றதாக வதந்திகளை பரப்புபவர்களிற்கும், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் தமது சுயலாபங்களிற்காய் கண்டன அறிக்கைகள் விடுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுமளவிற்கு எமது மாணவர்கள் தரங்கெட்டுப் போகவில்லை.
பகிடிவதைகள் என்பதனை தவறான அர்த்தப்படுத்தலுடன் பாலியல் சீண்டல்கள், பாலியல் வக்கிரங்கள், பாலியல் வன்முறைகள் என்ற வகையில் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவது எவ்வளவு தவறானது என்பதை புரிந்து கொள்ளாது ஒரு சில ஊடகங்கள் செயற்படுவது ஊடாக தர்மத்தையே இழிவுபடுத்தும் ஒன்றாகவே அமையும் என்பதனையும் மனவேதனையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.