நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி
நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.
கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.