நெதர்லாந்தில் 9 வருடங்களாக பண்ணைவீட்டில் அடைபட்டிருந்த குடும்பம் மீட்பு!
நெதர்லாந்தில் கடந்த 9 வருடங்களாக பண்ணை வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
அவர்கள் 16 வயதிலிருந்து 25 வயதிற்கு இடைப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்களுடன் இளைஞர்களின் 58 வயதான தந்தையும் உடன் இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் விவசாயக் காணியொன்றில் தனியாக அமைக்கப்பட்டிருந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அருகில் கிடைக்கக்கூடியதாக இருந்த காய்கறிகள், விலங்குகள் ஆகியவற்றை உட்கொண்டே இளைஞர்கள் நீண்ட நாட்களாக உயிர் வாழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ட்ரெந்த் (Drenthe) மாவட்டத்தின் கிராமமொன்றில் வசித்துவந்த குறித்த ஆறு பேரும் வெளியுலகத் தொடர்பு ஏதுமில்லாமல் வளர்ந்ததாக RTV Drenthe என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் இளைஞர்களில் ஒருவரை உள்ளூர் சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஒருவர் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் வீட்டைச் சோதனை செய்ததாக டிரெந்த் மாவட்ட பொலிஸார் தமது Twitter இல் பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், இளைஞர்களும் அவர்களின் தந்தையும் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் வீட்டு உரிமையாளர் ஒத்துழைக்காததால் அவர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பகிரவும்...