நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித சிக்கலும் இல்லாமல் தேர்வு எழுதலாம்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.
மாணவ-மாணவிகளை தலை முதல் கால் வரையில் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதக்கூடிய ஒவ்வொரு மாணவர்களும் இதனை பின்பற்றி ஆக வேண்டும்.
மாணவ-மாணவிகள் என்னென்ன செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதை தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ. கல்வி அதிகாரிகள் கடுமையாக பின்பற்றுகின்றனர்.
தேர்வுக்கு தயாராகிய மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் கவனமாக இதனை பின்பற்றினால் தேர்வு மையத்துக்கு எவ்வித சிக்கலிலும் மாட்டாமல் சென்று தேர்வு எழுதலாம்.
- மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாக 1.30 மணிக்கு செல்வது நல்லது.
- வெப்செட்டில் இருந்து பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும்.
- ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்த அதே பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றை கொண்டு வரவேண்டும்.
- ஒரிஜினல் அடையாள அட்டை ஒன்றை கொண்டு செல்ல வேண்டும். பாஸ்போர்ட், ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது.
- சலுகை பெறக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவர்களாக இருந்தால் அதற்கான துறைரீதியாக வழங்கப்பட்ட சான்றிதழ் ஒரிஜினலை கொண்டு வர வேண்டும்.
- மாணவர்கள் மெல்லிய அரைக்கை ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
- சம்பிரதாய மற்றும் பாரம்பரிய உடைகள் அணிந்து வருபவர்கள் தேர்வு அறைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும்.
- அதிக உயரம் கொண்ட காலணிகளை அணியாமல் குறைவான ஹீல்ஸ் அணிந்து வர வேண்டும்.
- தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விடைக்கு கூடுதலாக பதில் அளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும்.
- தேர்வு மையத்திற்கு பேனா, பேப்பர், வாலெட், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் கூடாது.
- குடிநீர் பாட்டில், டீ, காபி, குளிர்பானம், நொறுக்கு தீனி போன்றவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்து செல்லக்கூடாது.
- நீரழிவு நோயாளியாக இருப்பவர்கள் உரிய அனுமதியுடன் மாத்திரை, பழம், வெளிப்படையான குடிநீர் பாட்டில் கொண்டு செல்லலாம்,
- பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, குளிர்பானம், சாக்லேட், சான்விச் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஷூ மற்றும் முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது.