தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து மே மாதம் 7-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியதாக கூறுவது தவறான தகவல். அவர்கள் ஆட்சியில் இடையில் சரியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்காததால்தான் இந்தளவுக்கு பாதிப்பு அதிகமாகியது. இடையில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல அந்த மாதங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் பதவி ஏற்றதற்கு பிறகுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படியுங்கள்… நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி
நாங்கள் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருக்கோவில் குளங்கள், திருத்தேர்களை சீரமைத்து திருவிழாக்களை நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதியதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனத்தில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும்.
தி.மு.க. யாருக்கும் அடங்கிய யானை இல்லை. அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். தி.மு.க. அடக்க முடியாத யானை.
யானையின் 4 கால்களை போல் சமூக நீதி, மொழிப் பற்று, சுயமரியாதை, மாநில உரிமை தான் தி.மு.க.வுக்கு பலம்.
மீத்தேன், நியூட்ரினோ, சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுகிறது.
வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும்.
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.