Main Menu

தேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் வீரம் நிறைந்த, தன்மானம் உள்ள விவசாயிகள் இருந்திருக்கிறார்கள். அமித்ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்தது வருத்தம் அளிக்கிறது.

பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.

ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.