தேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு
கருத்து வேறுபாடுகளை ஏற்க தற்போதைய அரசு தயாராக இல்லை எனவும், மக்களுக்கு தேசப்பற்று குறித்த புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருவதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும் போது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறியதாவது:-
மத்தியில் தற்போது ஆளும் பா.ஜனதா அரசு கருத்து வேறுபாடுகளை மதிக்க தயாராக இல்லை. தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடைபெறும் போது, இந்த அரசு பாராமுகமாய் இருக்கிறது.
நாட்டு மக்களாகிய நமக்கு இன்று தேசப்பற்று குறித்து புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்காதவர்கள் தேசபக்தர்களாக அழைக்கப்படுகின்றனர்.
நன்கு திட்டமிட்ட சதி மூலம் நாட்டின் ஆன்மா நசுக்கப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் தனக்குரிய கடமையை நிறைவேற்ற பா.ஜனதா அரசு தயாராக இல்லை.
இவ்வாறு சோனியாகாந்தி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டு உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனக் கூறிய சோனியாகாந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.