தாய்லாந்து- நேபாளத்தில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று அடையாளம்!
தாய்லாந்து மற்றும் நேபாளத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று, கண்டறியப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் என இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்த மாறுபாட்டுடன் கண்டறியப்பட்ட நேபாள நாட்டவர் 71 வயதுடையவர் எனவும் வெளிநாட்டவருக்கு 66 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் வழியாக நேபாளத்திற்குள் நுழைந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல முதலாவது ஒமிக்ரோன் தொற்று தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயினிலிருந்து நாட்டிற்கு வந்த தாய்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரிடம் கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது என்று மூத்த பொது சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
35 வயதான அந்த நபர் தாய்லாந்திற்கு வந்தபோது நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டதாக மருத்துவ அறிவியல் துறையின் இயக்குநர் ஜெனரல் சுபாகிட் சிரிலக் தெரிவித்தார்.
அவர் எமிரேட்ஸ் எயார்லைன் விமானத்தின் ஊடாக, டுபாயிலிருந்து சுவர்ணபூமி விமான நிலையத்திற்குச வந்ததாகவும் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் எந்த நாளில் தாய்லாந்தில் நுழைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.