தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.
தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.
இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.
இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக ‘செல்பி’ படங்களை எடுக்கின்றனர்.
இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுக்க மாகாண அரசு தடைவிதித்தது.
எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த முடிவு சுற்றுலாவை வெகுவாக பாதித்து, கடற்கரையை மூட வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பகிரவும்...