தலிபான்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா வேண்டுகோள்
ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தலிபான் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் சீனா வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசை அமைத்தனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தலீபான் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் சீனா வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக இருநாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்பவும், நாடு முழுவதுமாக வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தலிபான் நிர்வாகத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.