தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகளுடன் ஒப்பிடவேண்டாம்.
தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளையும், இந்தத் தாக்குதலையும், விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட வேண்டாம் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டள்ளார். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. இறுதியிலேயே தற்கொலை தாக்குதல் என்ற மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்டார்கள்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, கல்வி சமத்துவமின்மை என்பவை விடுதலைப் புலிகளை இந்த நிலப்பாட்டுக்கு மாற்றியது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை முஸ்லிம் மக்கள் மீதோ, அந்த சமூகத்தின் மீதோ சுமத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும் தமது பொறுப்பில் இருந்து நழுவியுள்ளனர். பிரதமர் தனக்கு பாதுகாப்பு அமைச்சில் இடம் இல்லை என்றும் ஜனாதிபதியோ தனக்கு தெரியாது என்றும் கூறி நழுவுகின்றனர். இவ்வாறானவர்களே இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள முடிகிறதா இதனை மாற்ற வேண்டும் இதனை ஜே .வி .பி செய்யும் என வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் குளியாபிட்டிய, மினுவாங்கொட, நிக்கவெரட்டிய போன்ற பல இடங்களில் சிங்கள சஹ்ரான்கள் மதுபோதை சஹ்ரான்கள், அப்பாவிகளின் உடமைகளையும் உயிரையும் குடித்து பல கோடிகளை எரித்து நாசம் செய்தார்கள். இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள். இதுதான் இந்த நாட்டின் தலைவிதி எனவும், திருகோணமலை குளக்கோட்டன் தோப்பில் தனது கட்சி ஆதரவாளர்களிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.