தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி திடீர் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஏழு பேர் விடுதலை, சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு சமீபகாலமாக சாதகமான சூழ்நிலை இல்லை. மக்களவைத் தேர்தலில் தோல்வி, உட்கட்சிப் பிரச்சினை, திடீரென தோன்றிய ஒற்றைத் தலைமைப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சமீபகாலாமாக மேலோங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் ஊடகங்களில் பேசக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில் கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார்.
ஆளுநருடனான திடீர் சந்திப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டுவது சம்பந்தமாகவும், சட்டபேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்தும் பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.
22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வுக்குப் பின் நடக்கும் கூட்டம் என்பதாலும், சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கூட்டம் என்பதாலும், ஆட்சிக்கு எதிராக வேறு பிரச்சினைகள் தீர்மானத்தின்போது நடக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
ஆகவே, சட்டப்பேரவையைக் கூட்டுவது குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆளுநருடனான சந்திப்பின் நோக்கம் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.