டெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக ஸ்லோ பிட்சாக இருந்ததால், சென்னை அணிக்கு கணிசமான ரன்களை இலக்காக வைக்க டெல்லி பேட்ஸ்மேன்கள் நினைத்தனர். இதற்காக துவக்கம் முதலே அதிரடி காட்டினர். ஆனால், அவர்கள் நினைத்ததைவிட பந்து மிகவும் மெதுவாக எழுந்து, பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் திணறச் செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை 3-வது ஓவரில் பிரித்தார் சாஹர். அவரது துல்லிய பந்துவீச்சில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அவர் 5 ரன்க்கள் மட்டுமே சேர்த்தார். ஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தநிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள்.
பவர் பிளேவுக்கு பிறகு ரன் எடுக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அட்டகாசமான 4 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சார் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.
களத்தில் இருந்த ரிஷப் பந்த், ரூதர்போர்டு இருவரும், எப்படியாவது கவுரவமான ஸ்கோரை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹர்பஜன் ஓவரில் அபாரமாக சிக்சர் அடித்தார் ரூதர்போர்டு. அதன்பின்னர், ஆப் சைடில் வீசப்பட்ட லென்த் பாலை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 12 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.
அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 116 ஆனது. அடுத்து களமிறங்கிய கீமோ பால், 3 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ பந்தில் கிளீன் போல்டானார். 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை தட்டிவிட்டு 6 ரன்கள் ஓடி எடுத்த ரிஷப் பந்த், 4வது பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிரென்ட் போல்ட், ஜடேஜா வீசிய கடைசி ஓவரில், 2வது பந்தில் தன் முழு பலத்தையும் காட்டி சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் போல்டானார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் அடிக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது.
சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும்போது கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த டோனி 9 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100 வது வெற்றியை பதிவு செய்தது.